தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதில் பலர் நமது கடற்கரை பகுதிகளிலேயே பிடிபட்டு விடுகின்றனர். பலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று போதைப் பொருள் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபட்டவர்கள் 13 பேர். இவர்கள் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இலங்கை அருகே கல்பிட்டியா துறைமுகத்தில் கடலில் சென்ற ஒரு தமிழக மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் படகில் 10 மூடைகளில் இருந்த 400 கிலோ கஞ்சாவை படகுடன் பறிமுதல் செய்த கடற்படையினர் இதை கடத்திச் சென்ற 5 பேரையும் அவற்றை கடலில் வாங்கி செல்ல வந்திருந்த இலங்கை புத்தளத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.