மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் “ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி” எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ் தனது வாழ்த்துரையில் “பகவத் கீதை ஒரு சிறந்த ஆன்மீக நூல். இதில் இடம் பெற்ற சிந்தனைகள் அனைத்தும் மனிதர்களை பக்குவப்படுத்தி இறைநிலையை அடைய பேருதவியாக இருக்கும்”என்று கூறினார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். தேவதாஸ்”மகாத்மா காந்திக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களில் முதன்மையானது பகவத் கீதை. இவர் லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது பகவத் கீதையை ஆங்கில மூலம் படித்து அதன் தத்துவார்த்த சிந்தனைகளை அறிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தார். மேலும் இவர் தனது சபர்மதி ஆசிரமத்தில் பகவத்கீதை சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்” என்று கூறினார். கோவை ஆர்ச வித்யா குருகுலத்தை சார்ந்த சுவாமி ஜகதாத்மா னந்த சரஸ்வதி தனது சொற்பொழிவில் “பகவத் கீதை பக்தியோகம், கர்ம யோகம் மற்றும் தியான யோகம் ஆகிய வழிகளை ஞான யோகத்தை அடைவதற்காக காட்டுகிறது.
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய . நன்னெறிகளை புகட்டுகின்றது. இன்றைய இளைய தலைமுறையினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் பகவத் கீதையில் இடம்பெற்ற வாழ்வியல் நெறிகளான அன்பு, கருணை, தன்னலமற்ற செயல், தியாகம்,மனச் சமநிலை,பொறுமை,அகிம்சை, நேர்மை,தூய்மை, விடா முயற்சி, தற்பெருமையின்மை, சேவை மனப்பான்மை ஆகியவை கற்றுத் தர வேண்டும்” எனக் கூறினார்.இந்நிகழ்வில் பகவத்கீதா சுலோகங்கள் அனைவருக்கும் எளிமையான முறையில் கற்றுத் தரப்பட்டன.பகவத் கீதை நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், அருங்காட்சியக கல்வி அலுவலர் ஆர்.நடராஜன்,இயற்கை வாழ்வியல் அறிஞர் தேவதாஸ் காந்தி,நேதாஜி சுவாமிநாதன் சேவாலயம் மாணவர்கள், யோகா மாணவர்கள், பேராசிரியர்கள், காந்திய அன்பர்கள் ,அருங்காட்சியாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் செய்து இருந்தன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி