திருவண்ணாமலை : திருவண்ணாமலை வந்தவாசி வந்தவாசியை அடுத்த தெள்ளார் அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவர் ஏழுமலை. இவர் நேற்று இரவு பணிமுடிந்து புறப்பட்டபோது பெட்ரோல் பங்க் எதிரே சாலையோரம் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. அதனை அவர் எடுத்து பார்த்தபோது அதில் ரூ.8 ஆயிரத்து 450 பணம், ஏ.டி.எம். மற்றும் ஆதார் அட்டைகள் இருந்தது. இதையடுத்து அவர் அந்த மணிபர்சை தெள்ளார் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. உத்தமபுத்திரன், மூலம் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் ஆதார் அட்டை மூலம்காவல்துறையினர், மேற்கொண்ட விசாரணையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெரணமல்லூரை அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் மோட்டார்சைக்கிளில் தெள்ளார் வழியாக ஊருக்கு செல்லும்போது மணிபர்சை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து காலை தெள்ளார் போலீஸ் நிலையத்துக்கு வந்த பாபுவிடம் பர்ஸ், பணம், ஏ.டி.எம். மற்றும் ஆதார் அட்டைகளை இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து சாலையோரம் கிடந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஏழுமலையை பாபு மற்றும் காவல்துறையினர், பாராட்டினர்.