திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாரான 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் மெல்ல தண்ணீரை வெளியேற்றி பாதிப்பில் இருந்து மீண்டு விவசாயிகள் அறுவடைக்கு தயார் செய்து வந்தனர். நேற்று இரவு பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் திடீரென 7 செமீ கன மழை கொட்டி தீர்த்தது. பருவம் தவறி பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நெல்மணிகள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. பருவம் தவறிய மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி அறுவடை இயந்திரங்களைக் கொண்டு தற்போது அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டு சாகுபடி செய்த நிலையில் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டுள்ள விலை நிலங்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பிடை வழங்க வேண்டும் எனவும் பயிர்க் காப்பீடு பெற்று தர வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு