விழுப்புரம் : விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தினமும் காலை, மாலை நேரங்களில் விழுப்புரம் நகரில் உள்ள எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள மார்க்கெட்டுகள், கடைகளுக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக விழுப்புரம் நகரில் எந்நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் புதிய துணிமணிகள், பட்டாசுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இப்போதே விழுப்புரம் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் தவித்து வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ஸ்ரீநாதா, உத்தரவின்பேரில் விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் முக்கிய சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது விழுப்புரம் எம்.ஜி.சாலையில் இருந்து காமராஜர் சாலை வரை ஒரு வழிப்பாதையாகவும், அதேபோல் காமராஜர் சாலையில் பெரியார் சிலையில் இருந்து திருச்சி சாலை வரை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டு முக்கிய இடங்களில் தடுப்புக்கம்பிகள், பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. வசந்த், தலைமையிலான போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த சாலைகளின் வழியாக காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை 3 சக்கர, 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், விதிமுறைகளை பின்பற்றி ஒருவழிப்பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.