திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் பேரணி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தெருக்களை தூய்மைப்படுத்தி நெகிழி சேகரிப்பு மற்றும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து நெகிழி கழிவுகளை சேகரித்தனர். பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் சாலையோர சிறு கடைகளுக்கு நேரில் சென்று சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நெகிழிகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தினார். மேலும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் நெகிழியின் ஆபத்து குறித்தும் அவற்றை தவிர்ப்பது குறித்தும் அறிவுறுத்தி நெகிழி கழிவுகளை சேகரித்தனர். மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு