சென்னை : தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அதிரடியாக மூடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு காவலர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஊழியர்கள் காவல் நிலையத்தை பூட்டி கிருமி நாசினி தெளித்து உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் அனைவரும் மருத்துவ பரிசோதனை எடுத்து வருகின்றனர்.
ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இந்நாள் வரை சிறப்பாக பணியாற்றி வந்த நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆகியோர் தனிமைபடுத்தப்பட்டு இருப்பது, நுங்கம்பாக்கம் பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை