கோவை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டுவிழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் சென்னை வந்தார். சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று ( செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படைத் தளம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து 11:40 மணிக்கு ஹெலிகாப்டரில் ஊட்டி புறப்படுகிறார். மதியம் 12-15 மணிக்கு ஊட்டி ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் சாலை வழியாக ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.. 6-ந் தேதி காலையில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித் ஊட்டி ராஜ்பவன் வருகிறார்.
இதனால் ஊட்டியில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. திரு.சுதாகர் மேற்பார்வையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் ராணுவ விமானங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .கோவை மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.