விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் வி்க்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திருத்தங்கல் பகுதிக்கு குடிநீர் விநியோகம் சரியாக நடைபெறவில்லை, மாதத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி நகர் பகுதிக்கு வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிவகாசி பகுதிகளுக்கு போலவே, திருத்தங்கல் பகுதிகளுக்கும் குறைந்தது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று, திமுக கவுன்சிலர் சரவணகுமார் கோரிக்கை வைத்தார். திமுக கவுன்சிலர்கள் ஜெயராணி, ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் பேசும்போது, மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாறுகால்கள் கட்டும் பணிகள் முழுமையாக நடைபெறாமல் உள்ளது.
இதனால் தற்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக மழைநீருடன், கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. எனவே வாறுகால்கள் கட்டும் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பேசினர். திமுக கவுன்சிலர் ஞானசேகரன் பேசும்போது, சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ள பொத்தமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊருணியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய மேயர் சங்கீதா இன்பம், ஊருணி பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும் என்று உறுதியளித்தார். மேலும் கூட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி