‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.
1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் இத்தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு கருப்பொருளாக ‘அனைவருக்கும் குடிநீர்’ என்பது வைக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 33 சதவீதம்தான் பயனளிக்கிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி கொண்டே போகிறது. தமிழகத்தின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு 54 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டர். ஆனால் கிடைப்பது 46 ஆயிரத்து 540 மில்லியன் கன மீட்டர். இதுவும் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைவு, புவி வெப்பம் போன்ற காரணங்களால் சரிந்து கொண்டே போகிறது.
இனியும் தண்ணீரைச் சேமிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் உரைத்தது போன்று, அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், ‘உயிர்போல் காப்போம்’ என்ற உறுதி மொழியை மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.