திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.06.2024) நீதித்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நீதித்துறை சார்பாக மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி திருமதி.P.செல்வமுத்துக்குமாரி அவர்கள், மகிளா நீதிமன்ற நீதிபதி திரு.G.சரத்ராஜ் அவர்கள் தலைமை நீதித்துறை நடுவர் திரு.V.சுந்தர்ராஜ் அவர்கள் உள்ளிட்ட அனைத்து நீதித்துறை நடுவர்களும், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி அவர்கள், காவல்துறையும், நீதித்துறையும் எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கினார்கள்.
தொடர்ந்து பேசிய மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் காவல்துறையும், நீதித்துறையும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் என கூறினார்கள். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பிடிகட்டளைகள் குறித்தும் காவல் நிலையம் வாரியாக தெரிவித்தார்கள். இதனை குறைப்பதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தார்கள்.
காவல் ஆய்வாளர்கள் திருமதி.அமுதாராணி, வலங்கைமான் காவல் நிலையம், திருமதி.செல்வி கொரடாச்சேரி காவல் நிலையம், செல்வி.சந்தானமேரி வடுவூர் காவல் நிலையம், திருமதி.ஸ்ரீபிரியா, சைபர் கிரைம் காவல் நிலையம் வழக்குகளை கோப்பிற்க்கு எடுப்பது குறித்தும் வழக்கு சொத்துக்களை கையாளுவது குறித்தும் காவல்துறையினருக்கு நிலவும் இடர்பாடுகள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது குறித்தும் நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு 100 சதவிகிதம் இருக்கும் எனவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய சிறுசிறு கால தாமதங்கள் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்கள்.