சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டடார்.
உதித்சூர்யா, இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவர் உதித்சூர்யா, தமக்கு முன் ஜாமீன் வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால், மனுதாரர் சிபிசிஐடி காவல்துறையினர் முன்பு சரணடைய அறிவுறுத்தினார்.
இந்நிலையில் புகாருக்கு ஆளான உதித் சூர்யா திருப்பதில் பதுங்கியிருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர், திருப்பதி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த உதித்சூர்யாவை குடும்பத்தினருடன் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும், சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, தேனிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.