திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேடி என்பவரது மகன் ஆலடியான், வயது 70 என்பவர், தனது மூத்த மகன் ஏழுமலை, வயது 56 என்பவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வந்ததாகவும்,
தனது கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை வெங்கட்ராமன் மகன் ராமமூர்த்தி வகையாராவை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை முறைப்படி வருவாய் துறையினர் மூலம் அளந்து மீட்பதற்காக தனது மூத்த மகன் ஏழுமலை பெங்களூரிலிருந்து தாமரைபாக்கத்திற்கு வந்து.
தனக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்க ஏற்பாடு செய்ததாகவும், அதை மீட்க விடாமல் ராமமூர்த்தி வகையாராவைச் சேர்ந்தவர்கள் தடுத்ததாகவும், இந்நிலையில் கடந்த 16.10.2020 ஆம் தேதியன்று தனது மகன் தன்னுடன் இரவு 8 மணி வரை வீட்டில் இருந்ததாகவும்,
பிறகு தனது மூத்த மகனை சாப்பிடுவதற்காக பார்த்தபோது இரவு முழுவதும் காணவில்லை என்றும், இந்நிலையில் காலை 17.10.2020 ஆம் தேதி மாதிமங்கலம் செல்லும் பைபாஸ் சாலையில், காளியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள முட்புதர்கள், மரங்கள் அடர்த்தியாக உள்ள இடத்தில் முகத்தில், ரத்த காயங்களுடன் பாறை இடுக்கில் தனது மகன் இறந்து கிடந்ததாகவும்,
தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்பின் உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அளித்த புகாரையடுத்து, கடலாடி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து,
இறந்த ஏழுமலை உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சட்டம் சார்ந்த தடய அறிவியல் மருத்துவர் திரு.கமலக்கண்ணன் அவர்களின் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய பட்டது. பிரேதப்பரிசோதணையின் முடிவில் மருத்துவர் திரு.கமலக்கண்ணன் அவர்கள், ஏழுமலை கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளார் என்றும்,
இது கொலையாக இருக்கலாம் என கொடுத்த பிரேதப்பரிசோதணை அறிக்கையின் பேரில், சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை கொலை மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பிரிவு மாற்றம் செய்து விசாரணை நடத்தியதில், ஆலடியானின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ராமமூர்த்தியின் மகன் கோடீஸ்வரன் மற்றும் கோடீஸ்வரனின் தாத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏழுமலையை கொலை செய்தது தெரியவந்தததையடுத்து அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
திருவண்ணாமலை, SC/ST சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாண்பமை நீதிபதி திரு.R.கோவிந்தராஜன் அவர்கள், எதிரிகள் கோடீஸ்வரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் படி ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 201-ன் படி 7 வருட சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் எதிரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த புலன் விசாரணை அதிகாரி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் மற்றும் நீதிமன்ற காவலர் திரு.K.தமிழரசன் ஆகிய இருவரையும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்