திருச்சி : திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட மேல அம்பிகாபுரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படுவது வழக்கம். முபாரக் அலி மார்க்கெட் பகுதியில் கோழி கடை நடத்தி வருகின்றார்.
குணசேகரன் தான் குடியிருக்கும் வீட்டு மாடியில் பல்வேறு பூ தொட்டிகளை வைத்து வளர்த்து வந்திருக்கும் நிலையில் அன்று அந்த தொட்டியில் இருந்த பூக்களை பக்கத்து வீட்டை சேர்ந்த முபாரக் அலி என்பவரின் குழந்தை சேதப்படுத்தியிருந்திருக்கின்றது.
இதனை முபாரக் அலியின் மனைவியிடம் சென்று முறையிட்ட குணசேகரனை அவரது மனைவி தகாத வார்த்தைகளாலும், சாதிய ரீதியாகவும் சாடியிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் கடுமையாக முபார அலி மற்றும் அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். இது ஒரு கட்டத்தில் கை கலப்பாகவும் மாறியிருக்கின்றது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அவரவர் வீட்டிற்குள் அனுப்பியிருக்கின்றனர்.
இந்தநிலையில் முபாரக் அலி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் தாஜூதீன், அப்துல் கபூர் மற்றும் சிலருடன் காலை வேளையில் மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு தகராறு செய்வதற்காக சென்றிருக்கின்றார்.
குணசேகரன் தேர்தல் பணிக்காக வெளியே சென்றிருக்க குணாவின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் முபாரக் அலியும் நண்பர்களும். குணாவின் மனைவி 100-க்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டு தனது கணவருக்கும் தகவல் சொல்லியிருக்கின்றார்.
இதனையடுத்து அங்கு வந்த குணசேகரனை முபாரக் அலி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்த குணா 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இதுகுறித்து குணா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் காவல்துறையினர் முபாரக் அலி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒன்றுமே இல்லாத பூ செடிக்காக நடைபெற்ற வாக்குவாதம் கொலை வெறி தாக்குதலில் முடிவுற்றதையடுத்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்