கோவை : கோவை ஆலாந்துறையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை, தடுத்து நிறுத்தினார்கள்.
அவர் பைக்கை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். அவரை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது அவர் மோளபாளையம் – சென்னனூர் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் சென்று அவர் வைத்திருந்த மதுபாட்டில்களை மறைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்று விட்டார்.
போலீசார் அந்தத் தோட்டத்தில் சோதனை செய்தனர். அங்கு 18 மது பாட்டில்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் பதுக்கி வைதிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த நாட்டு துப்பாக்கி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் வயது 24 என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர் டெல்லியில் ராணுவத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றியதும், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக ரஞ்சித் குமார் இந்த தோட்டத்தில் தங்கி உள்ளார். இந்த தோட்டம் ரஞ்சித்குமாரின் உறவினரான ராமாத்தாளுக்கு சொந்தமானதாகும் .இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்