சென்னை: சென்னைஎழும்பூர், பழைய காவல் ஆணையரகத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டறையில் (State Police Control room) அவசர காவல் உதவி எண்.100 மையம் 24 மணி நேரம் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் உடனடி தேவைக்காக அவசர காவல் உதவி தொலைபேசி எண்.100ஐ தொடர்பு கொள்ளும்போது, மாநில கட்டுப்பாட்டு அறையில் தகவல்களை பெற்று, சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் அறிவுரைகளின்பேரில், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் திரு.ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் நேரடி கண்காணிப்பில், நவீன கட்டுப்பாட்டறை துணை ஆணையாளர் திரு.ஜி.ராமர், இ.கா.ப., தலைமையில், சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வரும்
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்கள் மற்றும் போக்குவரத்து வடக்கு மற்றும் தெற்கு காவல் மண்டலங்கள் ஆகிய 6 கட்டுப்பாட்டு அறைகள் நவீன மயமாக்கப்பட்டு, பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்பேரில், கடந்த 2 மாதங்களில், பொதுமக்கள் அளிக்கும் காவல் உதவி எண்.100 புகார்களில், சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட புகார்கள் மீது, காவல் ரோந்து வாகனங்கள் 5 நிமிடங்களுக்குள் (Response time 100 Calls) விரைந்து சென்று துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் 10.7.2021 அன்று முதல் கட்டுப்பாட்டறை புகார்கள் மீது மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் (Response time) காரணமாக தமிழக காவல்துறையின் அனைத்து மாவட்டங்களின் தரவரிசையில் 6 வது இடத்தில் இருந்த சென்னை பெருநகர நவீன காவல் கட்டுப்பாட்டறை, தற்போது தரவரிசையில் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், MDT எனப்படும் Mobile Data Terminal என்ற கருவி சென்னை பெருநகரில் உள்ள 354 ரோந்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டு ரோந்து வாகனங்கள் நிலை கொண்டுள்ள இடம், செல்லும் திசைகள் கண்டறியப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உதவி செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து MDT கையாள்வதற்கு தகுந்த பயிற்சி (Training for MDT Operating System) அளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு காவல் குழுவினரால் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
