விருதுநகர் : விருதுநகர் காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியம் திருச்சுழியில், இருந்து கமுதி செல்லும் சாலையில் உள்ள ஆனைகுளம் குண்டாற்று பகுதியில் மணல் குவாரி அமைத்திட பலமுறை முயற்சி செய்து வருகின்றனர். கடந்தகாலங்களில் ஆனைக்குளம் பகுதியில் மணல் குவாரி அமைக்க முயற்சி செய்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குவாரி அமைப்பது தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில் குண்டாற்று பகுதிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதாக ஆனைகுளம் ஊராட்சி பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், ஆய்வுக்கு வரும் கனிமவளத்துறை அதிகாரிளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனைகுளம், பூமாலைபட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்த போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு பணி தள்ளி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும் தொடர் போராட்டமும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில் திருச்சுழி பகுதிக்கு புதியதாக பொறுப்பு ஏற்ற துணை காவல் சூப்பிரண்டு திரு. ஜெகநாதன், குண்டாற்று பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நரிக்குடி ஆய்வாளர் திரு. ராமநாரயணன், தலைமையிலான காவல்துறையினர் , நேற்று ஆனைகுளம் குண்டாற்று பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் குண்டாறு பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருட்டும் நடைபெற்று வருகிறது. மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் , இணைந்து சோதனை சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.