விருதுநகர்: விருதுநகர்மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). இவர் திருவண்ணாமலையில் வேலை பார்த்து வந்தபோது, நட்சத்திர ஆமை ஒன்று கிடைத்ததாகக் கூறி, திருவில்லிபுத்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தார்.
நட்சத்திர ஆமையை நல்ல விலைக்கு விற்கலாம் என்று கேள்விப்பட்ட பிரசாந்த், தனது முகநூல் பக்கத்தில் நட்சத்திர ஆமை குறித்து தகவல்களை வெளியிட்டார். இதனைப் பார்த்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் 23, நித்தின் 20 இருவரும் நட்சத்திர ஆமையை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் சிவகாசிக்கு வருமாறு அழைத்த பிரசாந்த், தனது நண்பர் மகேந்திரனையும் உடன் அழைத்துக் கொண்டு, நட்சத்திர ஆமையுடன் சிவகாசிக்கு வந்துள்ளார். நட்சத்திர ஆமையை விலைக்கு வாங்குவதற்காக கேரளாவில் இருந்து அபிஷேக், நித்தின் இருவரும் சிவகாசிக்கு வந்தனர். சிவகாசி பேருந்து நிலையம் அருகே இவர்கள் 4 பேரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப்பகுதியில் ரோந்து வந்த போலீசார், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய 4 பேரையும் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரசாந்த் மறைத்து வைத்திருந்த நட்சத்திர ஆமையை எடுத்து போலீசாரிடம் கொடுத்தார்.
சட்ட விரோதமாக நட்சத்திர ஆமை விற்க முயன்ற பிரசாந்த் உட்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், நட்சத்திர ஆமை குறித்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகளிடம் நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது. வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேர் மீதும் வனத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.