விருதுநகர்: இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். ஜோசப் நேற்று வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டிலிருந்த ஜோசப்பின் மனைவி விஜயாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் வீட்டைப்பூட்டி விட்டு, அதே பகுதியில் இருக்கும் தனது தாயார் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த விஜயா, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது,
பீரோவில் அவர் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்படாமல், பீரோவும் உடைக்கப்படாத நிலையில் நகை, பணம் திருடு போனது குறித்து அதிர்ச்சி அடைந்த விஜயா, நகை திருட்டு குறித்து சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விஜயா புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விஜயா வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கதவுகள், பீரோ உடைக்கப்படாமல் நகைகள், பணம் திருட்டுப் போனது குறித்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நூதன முறையில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.