கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் பிரபல டாக்டரின் வீடு அதே பகுதியில் உள்ளது. இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் அங்கிருந்த 48 பவுன் தங்க நகைகள் 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தனர். பின்னர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நகை மற்றும் வெள்ளி பொருட்களை தங்களுக்குள் பங்கு பிரிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு எழுந்தது. அப்போது ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பலில் இருந்த ஒருவர் மட்டும் நகை வெள்ளிப் பொருள்கள் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். கத்திக்குத்து பட்ட நபர் வேறு எங்கும் செல்ல முடியாமல் மற்ற இருவருடன் சேர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக வந்தார். அங்கு மருத்துவர்கள் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று கத்திக்குத்து பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர் .மேலும் அவர்களுடன் கத்திக்குத்து பட்ட நபருடன் இருந்தவர்களையும் போலீசார் விசாரித்தனர். அதில் முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களை விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்கிற சத்யா மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுதீன், பிரதீப் கண்ணா ஆகியோர் நேற்று இரவு காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள பிரபல டாக்டர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து தங்களுக்கான பங்கை பறிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி விட்டு புகழேந்தி அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தப்பிச் சென்ற புகழேந்தி தனிப்படை அமைத்து தேடினர் .அப்போது நகை மற்றும் பணத்துடன் புகழேந்தி தென்னம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு அவரை மடக்கிப் பிடித்த போலீசார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும இந்த கொள்ளைக் கும்பல் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.