மதுரை : மதுரை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான கருப்பாயூரணி, பெரியார் அணை நீர்பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பிரபல உயர் கல்வி நிறுவனங்களும் இப்பகுதியில் செயல்படுவதால், மாணவ, மாணவிகள் கல்விக்காக இப்பகுதியை தேர்ந்தெடுத்து, குடி பெயர ஆரம்பித்து உள்ளனர்.
இப்பகுதியில் சட்டம், ஒழுங்கு குற்ற சம்பவங்களிலும் அதிகரிக்க துவங்கியுள்ளன. முன்பு, கருப்பாயூரணி கிராமமாக இருந்ததால் இவ்வூருக்கான காவல் நிலையம் 25 ஆண்டுக்கு முன்பு மதுரை ஆட்சியர் வளாகப் பகுதியில் செயல்பட்டது. மேலமடை, தாசில்தார் நகர், யாகப்பா நகர், வண்டியூர் போன்ற பகுதிகள் கருப்பாயூரணி காவல் நிலையத்துடன் இருந்தபோது, அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் அருகிலும், பிறகு தாசில்தார் நகரிலும், பின் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த 2008-ல் பாண்டிகோயில் அருகே மாற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, மேலமடை, தாசில்தார், யாகப்பாநகர், வண்டியூர், சிவகங்கை சுற்றுச்சாலை சந்திப்புப் பகுதிகள் நகருக்குள் இணைந்ததால், இப்பகுதிகள் அண்ணாநகர் காவல் நிலையத்துடன் சேர்க்கப்பட்டன. புறநகர்ப் பகுதியில் செயல்பட்ட கருப்பாயூரணி காவல் நிலையம் மீண்டும் நகருக்குள் வந்தது. தொடர்ந்து 25 ஆண்டுக்கு மேலாக கருப்பாயூரணி காவல் நிலையம் நகர் பகுதிக்குள் இருந்து செயல்படுகிறது என்றாலும், தற்போது புகார்தாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குள், கருப்பாயூரணி எல்லைக்குள் இருப்பதால் ராயல் கார்டன், சுற்றுச்சாலை சந்திப்பு பகுதியில் நடக்கும் பல்வேறு குற்றச் செயல் போன்ற பல்வேறு புகார்களுக்கு மக்கள் அருகிலுள்ள கருப்பாயூரணி காவல் நிலையத்தை அணுகும்போது, முகவரி விவரம் தெரிந்தபின், அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
கருப்பாயூரணி காவல் நிலையத்தை அதற்கான எல்லைக்குள் மாற்றவேண்டும் என்பது பொதுமக்கள், காவல்துறையினரின் எதிர்பார்ப்பு. அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனும் கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.