திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி எண் 153ஐ திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு மேல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் 10000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 60ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.மேலும் அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்தை திரும்ப பெற்றிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். தங்கள்து கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் 2026 சட்டமன்ற தேர்தலை ஒப்பந்த தொழிலாளர்கள் புறக்கணித்து திமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் எனவும் அப்போது எச்சரித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு