திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணி செய்யும் 40 தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடங்கி உள்ளனர். கடந்த (25.2.2007) அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்த இந்த நிலையத்தில் அப்பகுதியில் வசிக்கும் கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 பேர் பணியில் அமர்த்தபட்டனர். அதன்படி 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் வாரியத்தின் திட்டத்திலிருந்து சென்னை வாட்டர் டிஷாலினேஷன் லிமிடெட் திட்டத்திற்கு நிலையம் மாற்றப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திட்டம் மாற்றப்பட்ட பிறகு அதிலிருந்து பணி செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பளமும் வழங்கப்படவில்லை.
இது குறித்து தொழிலாளர்கள் சென்னை வாட்டர் டிசாலினேஷன் லிமிடெட் அதிகாரியிடம் கேட்கும் போது இத்தொகையினை சென்னை குடிநீர் வாரியமே உங்களுக்கு அளிக்கும் என கூறியுள்ளனர். பின்னர் சென்னை குடிநீர் வாரியத்திடம் கேட்கும் போது சென்னை வாட்டர் டிசாலினேஷன் லிமிடெட் உங்களுக்கு இதை அளிக்கும் என மாறி மாறி தொழிலாளர்களை அலைகழித்துள்ளனர். இதனால் ஏற்கனவே தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழிலாளர்கள் ஒருநாள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது சமரசம் பேசிய அதிகாரிகள் விரைவில் இதற்கு தக்க தீர்வு காணப்படும் என நம்பிக்கை அளித்தனர். ஆனால் இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக எடுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத சம்பளத் தொகையையும்,15 ஆண்டுகால நிலுவைத் தொகையையும் வழங்க கோரி இன்று நிலைய நுழைவாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி இந்த பகுதி வழியாக பொன்னேரிக்கு நலத்திட்டம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் நேரத்தில் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு