கோயம்புத்தூர் : கோவையில் நேற்று காலை தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி 27 லட்சம் ரூபாய்பணம் மற்றும் காரை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தில் கார் இன்று மாதம்பட்டி பகுதியில் மீட்கப்பட்டது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூர் பகுதியை சேர்ந்த அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் சம்சுதீன் (’42)என்ற டிரைவருடன் நேற்று அதிகாலை கோவையில் இருந்து 27 லட்ச ரூபாய் பணத்துடன் தனது
காரில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே, நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறைத்தது. அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேர் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டி அப்துல் சலாமையும் அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி தள்ளி விட்ட அந்த கும்பல் அப்துல் சலாம் வந்த காரை அவர் கொண்டு வந்த 27 லட்ச ரூபாய் பணத்துடன் கொள்ளை அடித்து சென்றது.இதையடுத்து அப்துல் சலாம் கே.ஜி.சாவடி போலீஸ்
ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இந்த சம்பவம் குறித்து கோவை போலீஸ் எஸ்.பி.அருளரசு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க மூன்று தனிப்படையும் அமைக்கப்பட்டது.இந்நிலையில் கொள்ளை கும்பல் அப்துல் சலாமிடம் இருந்து பறித்து சென்ற கார் பேரூரை அடுத்த மாதம்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சமபவத்தில் ஈடுபட்ட கும்பல் கேரளாவை நோக்கி சென்று இருக்கும் என போலீசார் தேடி வந்த நிலையில் கோவையில் கார் மீட்கப்பட்டதால் கொள்ளையர்கள் கோவை நகரில் அல்லது புறநகர் பகுதியில் எங்கேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்