திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) தொகையை தொழிற்சாலை நிர்வாகம் வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து நிர்வாகத்திடம் கேட்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். அப்போது, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பி.எப்.தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் துணை சூப்பிரண்டு திரு. சந்திரதாசன், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும்காவல்துறையினர், தொழிற்சாலைக்கு விரைந்து வந்து தொழிற்சாலை அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.