செங்கல்பட்டு: கடந்த சில நாட்களாக மதுராந்தகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சங்கிலி பறிப்பு சம்பவமானது நடந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் திரு. விநாயகம் அவர்களின் தலைமையில் படாளம் காவல் உதவி ஆய்வாளர் திரு.டில்லிபாபு மற்றும் தலைமை காவலர் திரு.குப்புசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் (20-03-2020) சித்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ஏழுமலை (வ/17) மற்றும் குமார் என்பவரின் மகன் வினோத்குமார் (வ/24) ஆகியோரை கைது செய்தனர். சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்திய மஞ்சள் நிற பல்சர் இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் தான் கடந்த சில நாட்களாக தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 39 சவரன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.