சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் 11-வது வார்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு துணைமின்நிலையம் அருகே நவீன மின்மயானம் கட்டப்பட்டது. தேவகோட்டை ஆற்றுப்பாலம் அருகே அனுமந்தக்குடி சாலை சித்தானூர் பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட ஆற்றின் ஓரம் பல ஆண்டு காலமாக பொதுமயானம் செயல்பட்டு வருகிறது. ராம் நகர் பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆறு கி.மீ தூரம் செல்கின்றனர். ராம்நகர் பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மின்மயானம் கட்டிமுடிக்கப்பட்டது. அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவர எதிர்ப்பு கிளம்பியது. அதனால் மின் மயானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில் மீண்டும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரி தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி