தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மாதம் (01.05.2023)-ம் தேதி முதல் (15.05.2023),-ம் தேதி வரை 15 நாட்கள் ‘’ஆப்ரேஷன் கஞ்சாவேட்டை 4.0’’-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீரழிக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
அதன்படி, கடந்த 15 நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் கஞ்சா பொருட்கள் கடத்திய மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 21 நபர்கள் மீது 16 வழக்குகள் பதிவுசெய்து அவர்களிடமிருந்து சுமார் 56,800/- ரூபாய் மதிப்புள்ள 5.7 கிலோ கிராம் கஞ்சா மற்றும் முன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை போன்ற சமுதாயத்தை சீரழிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்திலும் கைது செய்யப்டுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.