கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட், மூக்கண்டப்பள்ளி அருகே உள்ளது தேசிங் நகர் இந்த பகுதியில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து மூக்கண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சாவித்ரி, மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவரின் உடலில் இருந்த அடையாள அட்டை மூலம் அவர் பெயர் மஞ்சுநாதன் (29), கர்நாடக மாநிலம், பெங்களூரு, மகாலட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை சிலர் முகத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டுச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒசூர் சிப்காட் போலீஸார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்