தூத்துக்குடி : தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தூத்துக்குடி பெரியசாமி நகர் பாலம் பகுதியை சேர்ந்த செல்லா மகன் பொன்னுசாமி (42), என்பவர் திருச்செந்தூர் ரவுண்டானாவிலிருந்து தெர்மல்நகர் செல்வதற்காக TN 72 AJ 7666 என்ற இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறைமுகம் விரைவுச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு தூத்துக்குடி முத்துநகர் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சிவக்குமார் (36), என்பவர் திருசெந்தூர் ரவுண்டானாவிலிருந்து முத்துநகர் செல்வதற்காக TN 58 Q 7724 என்ற இருசக்கர வாகனத்தில் விரைவுச்சாலையில் சமிக்ஞை செய்யாமல் திரும்பியபோது மேற்படி பொன்னுசாமி வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களில் வந்த சிவக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து தெர்மல்நகர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெர்மல்நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.