திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 8வயது மகன் லித்தின் அங்குள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவரது பெற்றோர் கூலி வேலைக்கு சென்று இருந்த நிலையில் பிற்பகல் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சாலையில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை விரட்டி விரட்டி முகம், கையில் கடித்து குதறியது. இதனையடுத்து சிறுவனுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதே போல நகராட்சி துப்புரவு பணியாளர் மணிகண்டன் என்பவரையும் நாய் கடித்து குதறியது. பொன்னேரி நகராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் தொடர்ந்து பொதுமக்களை கடித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்திட பொன்னேரி நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு