திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காந்தி மார்க்கெட், பழனி ரோடு கேடி மருத்துவமனை அருகே மாற்றப்பட்டது.
இந்நிலையில் இங்கு வியாபாரிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கூடுவதற்கு சிரமம் ஏற்படும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பது சிக்கல் ஏற்படும்.
தனியார் மருத்துவமனை அருகில் உள்ளதால் அங்கு வரும் கொரோனா நோயாளிகள் மூலம் தொற்று ஏற்படும் என பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து திண்டுக்கல் காந்தி காய் கறி மார்க்கெட் 4 இடங்களில் பிரித்து வியாபாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு இன்று திண்டுக்கல் மார்க்கெட் அமைய உள்ள இடங்களில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட அருகிலுள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மார்க்கெட்டுக்கு வரும் போது முக கவசம் அணிந்து ,சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மார்க்கெட் அமையும் உள்ள இடங்களில் கை சுத்திகரிப்பான் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை போலீசாரும் கண்காணிப்பார்கள். மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும்.
ஊர் சுற்றுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் ,என்றார். அப்போது அவருடன் டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி ரவளிபிரியா உட்பட பலர் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா