தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் கால மீட்புக்கு பயன்படக்கூடிய மீட்பு உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது
என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை (State Disaster Rescue Force) பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் உள்ளனரா என்பதையும் இன்று (27.10.2021) மாலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த பேரிடர் மீட்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். இப்படையில் காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (Inflatable lights), வலுவான தூக்குப்படுக்கைகள் (Fortable Stretcher), ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, கோடாரி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி உட்பட 18 வகை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதையடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து துறையினரும் தயார் நிலையிலிருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்,
அதன்படி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டு, அந்தந்த காவல் நிலையங்களுக்கு அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
எந்த வித வெள்ளம் வந்தாலும் உடனடியாக மக்களை அல்லது உயிரினங்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தயார் நிலையில் இருக்கிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்