தூத்துக்குடி: தூத்துக்குடியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு இன்று (01.03.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி WGC ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை, தூத்துக்குடி பழைய மாநகராட்சி, சார்ஆட்சியர் அலுவலகம், ஸ்டேட் பேங்க் வழியாக மாதாகோவில் வந்து நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி திரு. ஏ.கே. லேம்கான், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், தென்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. ரவிக்குமார், திரு. சிவக்குமார், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் யாரும் பணம் அல்லது பொருட்களை வாங்கிகொண்டு வாக்களிக்க வேண்டாம், நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார்.