தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் இன்று (30.07.2020) காலை இதுவரை கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள் குறித்து அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நீண்டநாட்களாக கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகளின் நிலையையும், அவற்றை கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்து, தனிப்படைகள் அமைத்து அவற்றை விரைந்து கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேட்டறிந்து, அவற்றை சுமூகமாக மேற்கொள்வது குறித்தும், ரவுடித்தனம் மற்றும் கும்பல் ரவுடித்தனம் செய்பவர்கள் நிலையயை கண்காணித்தும், கஞ்சா மற்றும் எவ்வித போதை பொருள் விற்பனை, கடத்தல் போன்றவற்றை அடியோடு ஒழிப்பது குறித்தும், கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்குகள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணமும், நமது காவல்துறையின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும், காவல் நிலைய செயல்பாடுகள் சட்டத்திற்குட்பட்டே இருக்க வேண்டும் என்றும், அனைத்து காவல் நிலையங்களின் செயல்பாடுகளை அவ்வப்போது துணை கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் கைது நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, காவல்துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ், திருச்செந்தூர் திரு. பாரத், சாத்தான்குளம் பொறுப்பு திரு. நாகராஜன், கோவில்பட்டி திரு. கலைக்கதிரவன், மணியாச்சி திரு. சங்கர், சமூக நீதி மற்றும் மனித உரிகைள் பிரிவு திரு. பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு திரு. பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.