தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன், உத்தரவுப்படி, சாத்தான்குளம் காவல் உட்கோட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு, மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு, உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன், தலைமையில் தனிப்படை அமைத்து திருடில் ஈடுபடுபவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அதிகாலை 3.30 மணிக்கு பன்னம்பாறை ஜங்ஷனில் தனிப்படையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது யமகா ஸ்கூட்டரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில் அவரது பைக்கில் ஸ்குரூ டிரைவர், கட்டிங் பிளேயர் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் நகைகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கட்டாரிமங்கலத்தை சேர்ந்த, கொடிமலர் (40), என்பதும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.
அவர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் சம்மந்தபட்டவர் என்பது தெரியவந்தது. இந்த பொருட்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் உரிய உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்திரு. பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலைக் காவலர்திரு. சுதன், காவலர்கள் திரு. அகஸ்டின் உதயகுமார், திரு.அருண்குமார் ஆகியோர்களை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.