இராணிப்பேட்டை: துப்பாக்கி முனையில் கொலை குற்றவாளிகள் உட்பட 4 பேரை அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன் மடக்கி பிடித்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த சசி என்ற சசிகுமார். இவர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி, அரக்கோணம் மியான் சாயபு தெருவை சேர்ந்த பிரவீன் என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில், சசிகுமார் முக்கிய குற்றவாளி. இவரது நண்பர் திருத்தணியை சேர்ந்த சற்குணம். இவர் மீது திருத்தணியில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் சற்குணம் உள்ளிட்ட 4 பேர் அரக்கோணத்தில் காரில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இவர்கள் ஏதாவது அசம்பாவித செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக அவர்களை பிடிக்க வேண்டும் என்று டவுன் காவல் ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன், தானே காவல் வாகனத்தை ஓட்டியபடி, ரவுண்ட்ஸ் வந்தார்.
காவலர் திரு.ராஜேஷ் ரோந்து பைக்கில் சுற்றினார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் முன்பதிவு மையம் அருகில், சசிகுமார் வந்த காரை வழிமறித்து, போலீஸ் ஜீப்பை முன்னே சென்று இன்ஸ்பெக்டர் நிறுத்தினார். ராஜேஷ் தனது பைக்கை சசிகுமாருக்கு பின் பக்கம் நிறுத்தினார்.
அப்போது சசிகுமார் காரை வேகமாக இயக்கியதில் காவலர் ராஜேஷ் வாகனம் சேதமடைந்தது. தொடர்ந்து காரில் இருந்து தலையில் ரத்த காயத்துடன் கீழே இறங்கிய சசிகுமார், இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட வந்ததாக தெரிகிறது. இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் தன்னுடைய துப்பாக்கியை காட்டியபடியே தப்பித்து ஓட முயன்றால்? சுட்டு விடுவேன் என மிரட்டினார்.
இதனால் காரில் இருந்த சசி குமார் உட்பட 4 பேரும் வேறு வழியின்றி போலீசாரிடம் சரண் அடைந்தனர். தொடர்ந்து காரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு காரை பரிசோதனை செய்ததில் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் 23 இரும்பு ராடு, நம்பர் பிளேட்டுகள் வக்கீல் ஸ்டிக்கர் போன்றவை இருந்தன. தொடர்ந்து தலையில் ரத்த காயத்துடன் இருந்த சசிகுமாரை போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்று பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக திருத்தணியை சேர்ந்த கொலை குற்றவாளி சற்குணத்தின் எதிரிகளுடன் சண்டை போடும்போது சசிகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் யாராவது வெட்டினார்களா? என விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நான்கு பேர் துப்பாக்கி முனையில் இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் சினிமாவை மிஞ்சியதாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்