கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நில பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். விசாரணையில் கொலைக்கு உரிமம் பெற்ற துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கி அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பழி தீர்க்கும் வகையில் தவறாக பயன்படுத்துவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோவை போலீஸ் அதிகாரிகள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறியதாவது:- கோவை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இருக்கிறது. உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரைவில் கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
புதிதாக துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்க வேண்டும். அதற்கான லைசென்ஸ் மூன்று வருட காலத்துக்கு கொடுக்கப்படுகின்றது. அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். அதைப் புதுப்பிக்க கமிஷனர்/ கலெக்டரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் உங்களின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை. உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது போலீஸுக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்