கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன் (47), இவர் சேலம் மெயின்ரோட்டில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூரில் மற்றொரு நகைக்கடையை திறந்தார். புதிய கடை திறந்தவுடன் அங்கு அதற்கான வேலை ஆட்களை நியமித்து தினமும் 2 கடைகளையும் லோகநாதன் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மாலை 6 மணிக்கு புதிய கடையில் இருந்த அனைத்து நகைகளையும் லாக்கர் அறையில் வைத்து பூட்டினார்.
காலையில் கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த லோகநாதன் பதறியடித்து கொண்டு கடைக்கு வந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்த போது லாக்கர் அறை பூட்டும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது திகைத்து நின்ற லோநாதன், சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு திரு. பகலவன், மற்றும் காவல்துறையினர் , சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், லோகநாதன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
திட்டமிட்டு நடந்த இந்த கொள்ளை வழக்கில், நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள் முதலில் கடை அருகில் இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் நகைக்கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதையடுத்து பூட்டை உடைத்து கடைக்குள் சென்றஅவர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்கையும் கழட்டி கையோடு கொண்டு சென்றுள்ளனர். 281 பவுன் கொள்ளை, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரனையில் உள்ளனர்.