விழுப்புரம் : தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மாதந்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 மகளிர் போலீஸ் நிலையங்கள், 4 மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்கள், 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் என 42 போலீஸ் நிலையங்களிலும் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகள், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தென்னை, மா, பலா, தேக்கு, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.