சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.
தீபாவளி 27.10.2019 பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கவேண்டி கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(18.10.2019 தி.நகர் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 50 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். ஆளில்லா பறக்கும் குட்டி விமானம் (Drone) மூலம் குற்றங்களை கண்காணிப்பதற்காக Drone Camera கண்காணிப்பை துவக்கி வைத்தார்கள்.
ஏற்கனவே, மாம்பலம் காவல் சரகத்தில் 11474 சிசிடிவி கேமராக்களும், இத்துடன் 1092 சிசிடிவி கேமராக்கள் குறிப்பாக தி.நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தி.நகர், போத்திஸ், ரங்கநாதன் தெரு மற்றும் மாம்பலம் ரயில் நிலையம் அருகில் ஆகிய 3 இடங்களில் Face Tagger Camera எனப்படும் புதிய தொழில் நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
மேலும், முக்கிய சந்திப்புகளில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டதுடன், 3 இடங்களில் தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இதனுடன் சீருடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள (Body worn Camera) காவல் ஆளிநர்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் ஆளிநர்கள் தி.நகர் பகுதியில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர்,இ.கா.ப., தி.நகர் துணை ஆணையாளர் திரு.டி.அசோக்குமார், தி.நகர் உதவி ஆணையாளர் திரு.வி.கலியன், உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.