மதுரை : சோழவந்தான் அருள்மிகு திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவில் ஒரு பகுதியான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி,ஜவஹர்லால்,குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கோவில் செயல் அலுவலர் இளமதி,முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதிஉலா நடந்தது. கோவில் வளாகத்தில் குருவித்துறை சித்தரரதவல்லவபர்பெருமாள் கோவில் ஆஸ்தான வித்வான் பாலமுரளி குழுவினரின் நாதஸ்வரம் இன்னிசை கச்சேரி நடந்தது. உபயதார் சிவஞானம் பிள்ளை குமாரர்கள் பிரசாதம் வழங்கினார்கள். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.சோழவந்தான் பேரூராட்சி சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர் மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், இன்று வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், நாளை சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி