தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் வீட்டில் பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தை திருடி “ஃப்ரீ ஃபயர்” என்ற ஆன்லைனில் விளையாடி வருவதாக தகவல்கள் வந்துள்ளது – பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் மூழ்கி அவர்களது வாழ்க்கையை தொலைத்துவிடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தை திருடி செல்போனில் இணையதளத்திற்கு செலவு செய்து “ஃப்ரீ ஃபயர்” போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடி வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் தங்களை அறியாமல் மூழ்கி தங்களது படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருகின்றனர். இது அவர்களது உடல் நலத்தையும், வாழ்க்கையையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். மேலும் இளைஞர்கள் உட்பட பலர் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் விளையாடி விட்ட பணத்தை பெற்றுவிடலாம் என்று மேலும், மேலும் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி தற்கொலை செய்து வருவதை அடிக்கடி செய்தித்தாள்களில் வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகவே பொதுமக்கள் தங்களது பிள்ளைகள் மீது அடிக்கடி கவனம் செலுத்தி இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களில் தங்களது பணத்தை இழக்காமல் இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடாமல் தவிர்த்து, நேரத்தை கல்வி மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்களது எதிர்காலத்தை நல்வழியில் கொண்டு சென்று நமது வீட்டிற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.