திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று 17.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உடன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.D.குமார், கைவிரல் ரேகை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.சுந்தரராஜன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம் ,சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.