திருப்பத்தூர் : திருப்பத்தூர் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். என்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலகிருஷ்ணன், அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குறித்த நேரத்தில் மட்டும் கோர்ட்டு உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். மேலும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. சீன தயாரிப்பு பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகளிலும், மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. பெற்றோர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடித்தல் வேண்டும். பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. விபத்தில்லாமல் கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்த வேண்டும். பொதுமக்கள் காவல்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விபத்தில்லாமல், பாதுகாப்புடன், மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.