கோவை : தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஸ்வகர்ம ஜகத்குரு சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், விஸ்வகர்மா சமுதாய மக்களின் பாரம்பரிய தொழில்கள் ஐந்து. அதில் முக்கியமான இரும்பு வேலையான கொல்லர் பட்டறையில் அரிவாள், வேல் கம்பு, கதிர் அரிவாள் அடிப்பது ,கடப்பாரை போன்ற விவசாய உபகரணங்கள் செய்வதாகும்.
தேங்காய் வெட்டுவது முதல் விளை பயிர்களை அறுப்பது வரை அனைத்து பணிகளுக்கும் அறிவாள் ஒரு முக்கிய கருவி ஆகும்.இதனை விஸ்வகர்ம சமுதாய மக்கள் பாரம்பரியமாக திறம்பட செய்து வருகின்றனர். சமீப காலமாக நடைபெறும் குற்ற சம்பவங்களில் அரிவாள் செய்யும் கொல்லர்களை தொடர்பு படுத்தி கைது செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. விஸ்வ கர்மா மக்கள் தங்கம் எடுத்தால் நகை வடிப்பார்கள். தாமிரம் எடுத்தால் பாத்திரம் செய்வார்கள். மரம் எடுத்தால் தேர் செய்வார்கள். கல் எடுத்தால் சிலை வடிப்பார்கள். இரும்பெடுத்தால் அரிவாள் செய்வார்கள். இப்படி பாரம்பரிய தொழில் செய்பவர்களை குற்றவாளிகள் போல துன்புறுத்துவது மிகவும் தவறானது. பாரம்பரியமாக இரும்பு தொழில் செய்பவர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு தக்க அனுமதி அளித்து அவர்களை கைது செய்வதை போலீசார் கைவிட வேண்டும்.
இது குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்ப பட்டுள்ளதாகவும், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வை நேரில் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் பாபுஜி சுவாமிகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்