திருநெல்வேலி: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21 காவலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் 292 காவலர்கள் இந்தியாவில் பணியின் போது வீர மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏதேனும் ஒரு இடத்தில் தினசரி ஒரு காவலர், தனது பணியின் போது இன்னுயிரை தியாகம் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு முதல் அக்டோபர் 21 ம் நாளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தியாகிகள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளினை கௌரவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி திரு K. P. சண்முக ராஜேஸ்வரன் IPS அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்பு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவீன் குமார் அபிநபு IPS மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் IPS,திரு. ச.சரவணன், காவல் துணை ஆணையர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்பு பணியில் இருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர் குடும்பத்தினரை தென் மண்டல ஐஜி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவபடுத்தினார்.