கோவை: கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருகூர் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த மார்ச் 3 ம் தேதி பூட்டிய வீட்டில் 13 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் திருடு போன வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டனர். வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், வீட்டில் இருந்து இருவர் தப்பி ஓடியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களில் ஒருவரை பிடித்த நிலையில் மற்ற இருவர் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த திவ்யேஷ் கிருஷ்ணா (எ) வசந்த் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தப்பி ஓடியவர்கள் சுரேஷ், இசக்கி பாண்டியன் மற்றும் சூர்யா என்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பி ஓடியவர்களை ஒண்டிப்புதூர் பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 35,000 பணம் ஆகியவை மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சூர்யா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளும், சுரேஷ் மீது 2 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பரமத்தி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியும், திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் இசக்கி பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சூர்யா சிறார் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை கோவை மாநகர காவல் ஆணையர் பாராட்டி உள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்