திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனையில் குற்றங்கள் குறைவதால் தேர்தலுக்கு பின்பும் இதேபோல தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சட்டசபை தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து விதிமீறல் பணப்பட்டுவாடா போன்றவற்றை தவிர்க்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நுழைவு பகுதியில் சோதனை சாவடிகள் கூடுதல் போலீசார் 24 பறக்கும் படைகள் 24 மணி நேரம் சுழற்சிமுறையில் பணியில் உள்ளனர். இதுமட்டுமின்றி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் இடைவெளியில் சோதனைகள் நடத்த வண்ணம் உள்ளன இதனால் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. வழிப்பறி, பைக், அலைபேசி பறிப்பு திருட்டு குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் அடக்கி வாசிக்கின்றனர். போலீசார் ரோந்து பணியில் இருப்பது வழக்கம்தான் அந்நேரங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே கண்காணிப்பில் ஈடுபடுவர் ஆனால் தேர்தல் நேரத்தில் 24 மணி நேரமும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்வதால் குற்றங்கள் குறைந்துள்ளன. எனவே இதுபோன்ற கண்காணிப்பு சோதனையை தேர்தல் முடிந்த பின்னும் தொடர்ந்தால் குற்றங்களை வெகுவாக குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.