தூத்துக்குடி : கோவில்பட்டியையடுத்த விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி மகன் கற்பகராஜ் (33),கட்டடத் தொழிலாளியான இவர் மற்றும் இவரது மனைவி குருலட்சுமி, மகன் முத்தரசு ஆகியோருடன் தீத்தாம்பட்டியில், இருந்து ஊருக்கு ஜூலை 14ஆம் தேதி இரவு திரும்பி கொண்டிருந்த போது பைக்கை வழிமறித்த மர்ம நபர்கள் குருலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் 4 கிராம் தங்க கம்மலை பறித்துவிட்டு தப்பியோடினர்.
இதேபோல, நாகம்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சிவராமச்சந்திரன்(29), கூலித் தொழிலாளியான இவர் மற்றும் இவரது மனைவி வசந்தகுமாரி, 2 மகன்கள் கோவில்பட்டியில், உள்ள திரையரங்கில் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஜூலை 16ஆம் தேதி இரவு ஊருக்கு திரும்பி உள்ளனர்.
சிவராமச்சந்திரன் ஓட்டிச் சென்ற பைக் கரிசல்குளம் ஊருக்கு வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேர் பைக்கை வழிமறித்து வசந்தகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், 2 கிராம் கம்மல், 3 கிராம் காதுமாட்டி ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பியோடினர். கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் சொரிமுத்து மகன் பரமசிவன்(67), மற்றும் அவரது மனைவி பார்வதி(58), ஆகிய இருவரும் இம்மாதம் 5ஆம் தேதி இரவு முத்தானந்தபுரம் தெருவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது தம்பதி வ.உ.சி. நகரில் உள்ள அஞ்சல் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மர்ம நபர் பார்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 2.5 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு, தம்பதியினரை கீழே தள்ளிவிட்டு, அங்கே பைக்கில் நின்று கொண்டிருந்த இருவருடன் அந்த மர்ம நபர் பைக்கில் ஏறி தப்பியோடி உள்ளனர்.
இதுகுறித்து 3 பேரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர், கொப்பம்பட்டி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் காவல்துறையினர், வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்திரு.கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.அரிக்கண்ணன், காவல்துறையினர் திரு.அமல்ராஜ், திரு.பாண்டியராஜ், திரு.சரவணன், ஆகியோர் இளையரசனேந்தல் சாலையில் சித்திரம்பட்டி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் சென்ற 3 பேரை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த விஜயகுமார்(32), அய்யனேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்(19), நாலாட்டின்புத்தூர் மொட்டைமலையைச் சேர்ந்த சிரஞ்சீவி(20), ஆகிய 3 பேரை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீஸார் அவர்களிடமிருந்த 7.5 பவுன் தங்க நகைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.